தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வாக்கு எண்ணிக்கை; 3,000 போலீசார் பாதுகாப்பு! - Chennai Election result

Chennai Election result: சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியின்போது 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Voters
வாக்கு எண்ணும் மையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 8:12 PM IST

சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வருகிற 4ஆம் தேதி ஏழு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளும் ஒரே நாளில் எண்ணப்பட்டு, நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதும் தெரிய உள்ளது. இந்நிலையில், சென்னையைப் பொறுத்தவரை வட சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் இராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த மூன்று மையங்களிலும் தேர்தல் நடைபெற்று முடிந்ததிலிருந்து மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை அன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று மையங்களிலும் சேர்த்து 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மேற்பார்வையில், கூடுதல் ஆணையர் தெற்கு பிரேம் ஆனந்த் சின்கா, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணி நடைபெற உள்ளது.

இதில் 10 காவல்துணை ஆணையர்கள், 35 உதவி ஆணையர்கள், 70 காவல் ஆய்வாளர்கள், 120 உதவி ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை போலீசார் என 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வன்முறையில் ஈடுபடுபவர்களை கவனிக்கும் வகையில் வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாக்கு எண்ணிக்கை மையங்கள், அவை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தேவைக்கு ஏற்ப பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதையும் படிங்க:அடுத்த பிரதமர் யார்? ராகுலா.. மோடியா? மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details