புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை, முன்னாள் எம்.பியும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருநாவுக்கரசர் நேற்று திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை (BSP TN Unit President Murder) செய்யப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் உண்மை குற்றவாளிகள் தானா? என்பதை உறுதி செய்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக நாம் கூற முடியாது.
கடமையை சரியாக செய்யும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும்:ஏனென்றால், எதிர்க்கட்சியினர் இதுபோல ஆளுங்கட்சியின் மீது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கம்தான், அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் திமுகவும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை தான் வைத்திருக்கும். தற்போது, காவல்துறையும், தமிழக அரசும் அவர்களது கடமையை சரியாக செய்து கொண்டு வருகின்றனர்.
மேலும், கள்ளச்சாராய சம்பவங்கள், அங்கும் இங்கும் நடக்கக்கூடிய படுகொலை சம்பவங்கள், வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கு காவல்துறை செயல்பட வேண்டும். காவல்துறையினர் மெத்தனமாக செயல்படக்கூடாது, அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார்:தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளுக்கு காங்கிரஸ் 99 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி பேசிய பேச்சுக்குப் பதில் அளித்த திருநாவுக்கரசர், 99 தொகுதியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார், மோடி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார் என்றார். முன்னதாக, மக்களவையில் (ஜூலை 2) பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியினர் 100-க்கு 99 பெறவில்லை. 543-க்கே 99-ல் தான் பெற்றுள்ளனர். 100-க்கு 99 இடங்களில் வெற்றி பெற்றதைப் போன்று பேசுகின்றனர் என்றார்.