தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கிருஷ்ணா நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்னதானம் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக தேர்தல் வாக்குறுதிகளை 95% நிறைவேற்றவில்லை என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் திமுகவை எதிர்ப்பதே எங்களுடைய இலக்கு என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிமுகவிற்குப் பதிலடி கொடுக்க ஒரு இயக்கம் தமிழகத்தில் இதுவரை தோன்றவில்லை. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நடிகர் கமல்ஹாசனின் கட்சி. திமுகவுடன் கூட்டணி சேருவதற்காக ஒரு இடத்தில் அதிமுக பற்றிப் பேசி உள்ளார். அவருடைய கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை.
திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. பாஜக கூட கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. 2 முறை தேர்தலை இணைந்து சந்தித்தவர்கள் இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு நடைபெறவில்லை என்றால் அங்குப் பிரச்சனை இருப்பதாகத் தான் தெரிகிறது.
திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டு வெளியேறுபவர்கள் எங்களுடன் கூட்டணி சேரலாம் இல்லை தனித்துப் போட்டியிடலாம். அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தொகுதிப் பங்கீடு இறுதி வடிவம் பெற்ற பிறகு அது வெளிச்சத்திற்கு வரும்" என்று தெரிவித்தார்.