சென்னை:பார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், பணிச்சுமை காரணமாகவே காவல் உதவி ஆணையர் உயிரிழந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “திமுக முதலாளித்துவ அரசு, கார்ப்பரேட் அரசு. ஏழை, எளிய மாணவர்கள் திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது தான் பார்முலா 4 கார் பந்தயம்.
கார் ரேஸா? நாய் ரேஸா: அரசு ஏற்கனவே பார்முலா 4 கார் பந்தயத்திற்கு ரூ.48 கோடி செலவழித்தது. ஆனால், அதனை நிறுவனத்திற்கு திருப்பித் தரவில்லை. இது பார்முலா 4 கார் ரேஸா? அல்லது நாய் ரேஸா என்பது தெரியவில்லை. ஒரு நாய் உள்ளே புகுந்து, ஒரு மணி நேரம் அவர்களுக்கு தண்ணீர் காட்டியுள்ளது. எப்ஐஏ சான்றிதழ் முன்பே வாங்க வேண்டும். இவர்கள் ஏன் முன்பே வாங்கவில்லை?
கார் பந்தயம் மூலம் வசூலிக்கப்படும் பணம் யாருக்கு?: தகுதிச் சுற்றிற்கு மட்டும் ரூ.1,700-லிருந்து 17 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு, 10 ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களது பணம் போச்சு. இது குறித்து விளையாட்டுத் துறை தெளிவுப்படுத்தவில்லை. இந்தப் போட்டிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது. மேலும், கார் பந்தயத்தை இரண்டு தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பு செய்து லாபம் பார்க்கின்றனர்.
முதலமைச்சர் நாடு எப்படி போனால் என்ன? மழை வந்தால் என்ன? வெள்ளம் வந்தால் என்ன? என அமெரிக்கா சென்றுள்ளார். அதேபோல், அண்ணாமலையும் லண்டன் சென்றுள்ளார். அங்கே என்ன நடக்கிறது என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சில தினங்களில் நாம் பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆனால், அதில் கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த துறைகளும் கார் பந்தயத்தில் மட்டும் குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.