புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் 5 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர். கடந்த 2021 - 2022ஆம் ஆண்டுகளில் படித்த சுதாகர் மற்றும் சுபாஸ்ரீ, 2022 - 2023ஆம் படித்த ஆர்த்தி, ஜெயந்தி, கடல் வேந்தன் என ஐந்து மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மூன்று மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியிலும், இரண்டு மாணவர்கள் தனியார் மருத்துவk கல்லூரியிலும் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு பாராட்டு விழா இன்று பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய விஜயபாஸ்கர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தாலும், வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று ஐந்து மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சாதனை புரிபவர்களை மட்டும் தான் இந்த உலகம் உற்றுப் பார்க்கும். எனவே, மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான விதையை தற்போது விதைக்க வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர் கூறியதாவது, “அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கனவு நனவாகக்கூடிய நாள் மிகப்பெரிய பொற்காலமாக கருதப்படுகிறது. தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சுதாகர், சுபஸ்ரீ, ஆர்த்தி, ஜெயந்தி, கடல் வேந்தன் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 540 மதிபெண்களுக்கு மேல் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைத்துள்ளது.