வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் நினைவு சொற்பொழிவு விழாவானது பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஏராளமான வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும் இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் நீதிபதி கிருபாகரன் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "மற்ற நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ளது என்பதும் உண்மை தான். அதற்கு காரணம், போதிய நீதிபதிகள் இல்லை. மேலும், தேவையான அளவு நீதிமன்ற கட்டிடங்களும் இல்லை.
இதுமட்டும் அல்லாது, வழக்கறிஞர்களும் ஒரு காரணம். இவற்றை எல்லாம் மாற்றுவது என்பது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் கடமையுமாகும். நான் நீதிபதியாக இருந்த போது 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1965 ஆம் ஆண்டு தொடரப்பட்டு 50 ஆண்டுகளாக தீர்வு காணாமல் இருந்த வழக்கை தீர்ப்பு சொல்லி முடித்து வைத்திருக்கிறேன்.