சென்னை: தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்றுடன் (மே 31) பணி ஒய்வு பெற வேண்டிய சூழலில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த வெள்ளத்துரை தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றப் பதிவுப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து ஒய்வு பெறும் சமயத்தில் அவரை சஸ்பெண்ட் செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அதிகாரிகள் அவரை கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டு, ஓய்வு பெரும் நாளில் அவரை தூக்கி எறிவது, சிறந்த தலைமைக்கு உரிய பண்புகள் அல்ல'' என்றும் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மாணிக்கவாசகம் கூறியுள்ளார்.
முன்னாள் டிஎஸ்பி மாணிக்கவாசகம் தமது முகநூல் பதிவில் கூறியிருப்பது; இன்று (31.05.2024) பணி நிறைவு பெற்று ஓய்வு பெற இருந்த நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கும் செயல் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எவ்வளவு கடுமையான பணிகளை அளித்தாலும், அவற்றை சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழிக்காமல், அசாத்திய துணிச்சலுடன் எதிர்கொண்டு தன் கடமையை செவ்வனே செய்தவர் வெள்ளத்துரை என்பது தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்ல. பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.
இப்படி பொதுமக்களிடையே நல்ல இமேஜ் கொண்ட ஒரு காவல் அதிகாரியை ஏதோ ஒரு Technical Reason-ஐக் காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளன்று சஸ்பெண்ட் செய்யும் செயல், திறம்பட பணியாற்ற நினைக்கும் மற்ற இளம் காவல் அதிகாரிகள் மனதில் கோழைத் தனத்தை உருவாக்கி விடுவதுடன், தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் மிகப் பெரும் கெட்ட பெயரையும் ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.