புதுக்கோட்டை:கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், மாவட்டம் வாரியாக தொண்டர்களைச் சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்.5) நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரத்தினசபாபதி, தெற்கு மாவட்ட செயலாளர் ஞான கலைச்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்ன சபாபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
துரோகம் ஆட்சி: அப்போது அவர் பேசுகையில், “அதிமுக தொண்டர்களின் இயக்கம். அதனால் தான் பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதை தொண்டர்களுக்கு தான் தந்தார் எம்ஜிஆர். அதை திருத்தம் செய்யவோ மாறுதல் செய்யவோ கூடாது என்று எம்ஜிஆர் கூறினார். துரோகம் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகம் செய்து அதை காலில் போட்டு மிதித்து, அதனை ரத்து செய்துள்ளார்.
தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம்: தற்போது கோடிகளை குவித்து வைத்துள்ள மிராசுதாரர்கள் கோடீஸ்வரர்கள் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை, பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க விடலாமா?. அதற்காக தான் தற்போது தர்மயுத்தம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்களின் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி வருகிறோம்.
கட்சி பிளவுபடக்கூடாது:எடப்பாடி பழனிசாமி மறைமுகமான சதி வேலை செய்தார். முதல் தர்மயுத்தம் தொடங்கிய போது தொண்டர்களின் விருப்பப்படி நிபந்தனையின்றி இணைந்தோம். ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும், கட்சியை நானும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்சி விவகாரத்தில் இருவரும் கையொப்பம் போட வேண்டும் என்று குண்டை தூக்கி போட்டார்கள். கட்சி பிளவுபடக்கூடாது என்பதற்காக அதையும் ஏற்றுக்கொண்டேன்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே சமயம் பார்த்த எடப்பாடி பழனிசாமி கூவாத்தூரில், ஒற்றை தலைமை வேண்டும் என்று பேச வைத்தார். பின்னர் பொதுக்குழுவை கூட்டியதாக கூறி ரவுடிகளையும், கேடிகளையும் வைத்து கொண்டு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் பழனிசாமியின் பல தடைகளை தாண்டி நான் கலந்து கொண்டேன்.
8 தேர்தலில் தோல்வி:அதில் இதுவரை எந்த அதிமுக பொதுக்குழுவிலும் நடைபெறாத வகையில் தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் வீசி அவமரியாதை செய்யப்பட்டது. பின்னர், இரண்டாவது பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா வகித்த பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அந்த பதவியை ரத்து செய்ய பழனிசாமி யார்?, அவர் பொறுப்பேற்று 8 தேர்தலில் தோல்வியை கண்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியே காரணம்:தான் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்து தவறான கொள்கை முடிவை எடுத்து தான் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எண்ணினார். நான் வேண்டாம் வெற்றியடைந்தவுடன் பார்த்து கொள்வோம் என்றேன். கேட்காததால் அவரே முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து, அந்த பாவத்தை நான் தான் செய்தேன். சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, எதிர்கட்சியாக வர ஒரே காரணம் எடப்பாடி பழனிசாமி என்ற தனிமனிதன் தான்.
கூட்டணி சேர்வதற்கு ஆளில்லை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுதோல்வி அடைய காரணம் பழனிசாமி தான் காரணம். தொடர்ந்து 9 தேர்தலில் தோல்வி. அவருக்கு ஒரு சதவீதம் கூட மக்களிடம் ஆதரவு இல்லை. கூட்டணி சேர்வதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை. அதிமுகவோடு போட்டி போட்டு கூட்டணி பேசிய காலம் எல்லாம் போய், தற்போது கூட்டணி சேர்வதற்கு ஆளில்லை. காலை முதல் மாலை வரை காவல் காத்துக் கொண்டு உட்கார்ந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது: வெளியே சென்று பார்த்தால் கூட்டணிக்கு கட்சி தலைவர்கள் யாரும் வரவில்லை. ஐஸ் விற்கிறவர்கள் தான் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு அதிமுக கட்சியை பால்படுத்திவிட்டார். தொண்டர்கள் விட மாட்டார்கள். தொண்டர்களுக்கும் இயக்கத்திற்கும் துரோகம் செய்தால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது. இழிவு நிலைக்கு தள்ளப்படுவார். கட்சி கொடியை வேட்டியை பயன்படுத்தக்கூடாது, பேனர் வைக்க கூடாது என்று கூறுகிறார்கள்.
தொண்டர்கள் அடித்து விரட்டுவார்கள்:ஆனால் அதிமுக தொண்டர்கள் எங்களிடம் ஓடுவது அதிமுக இரத்தம். இந்த இரத்தத்தை உறிஞ்சிவிட்டு வேறு இரத்தம் பாய்ச்ச முடியாது. அதனால் மீண்டும் தொண்டர்கள் தான் எல்லாம் என்ற நிலை வரும். பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் இல்லை என்றால் தொண்டர்கள் அடித்து விரட்டுவார்கள்.
திமுகவும் அதிமுகவும் கூட்டணியோ?:கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குற்றவாளிகளை 3 மாதத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 36 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அனைவரிடமும் சந்தேகம் வருகிறது. ஒரு படத்தில் சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்னு சொல்வதை போல வேறு எங்கும் இல்லாத வகையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் தான் பதில் கூற வேண்டும்” என்று பேசினார்.