வேலூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இவரது இளைய மகன் சசிமோகன் மற்றும் மருமகள் பூர்ணிமா(30) தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலையில், பூர்ணிமா வீட்டில் உள்ள பூஜை அறையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்தபோது எதிர்பாராதவிதமாக விளக்கிலிருந்த தீ பற்றி பூர்ணிமாவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 80 சதவீதம் தீ காயம் அடைந்த பூர்ணிமாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் பூர்ணிமா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வாரக் காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.25) காலை உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையானது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தருமபுரி பாலக்கோடு எடுத்துச் செல்லப்பட உள்ளது. முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?