கடலூர்: சிப்காட் அருகே சின்ன காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயபாலன். சிப்காட் ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் இவர் நேற்று இரவு தனது வீட்டு பகுதியில் பாம்பு வருவதை கண்டு அவற்றை துரத்தியுள்ளார். ஆனால், பாம்பு எதிர் பாராத விதமாக வீட்டில் செருப்புகள் இருக்கும் பகுதிக்குள் சென்று அங்கிருந்து பள்ளி சிறுவர்களின் ஷூவில் மறைந்துள்ளது.
இதனையடுத்து, விஜயபாலன் வன ஆர்வலரான செல்லாவிற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த வன ஆர்வலர் செல்லா, அங்கிருந்த ஷூக்களை எடுத்துப் பார்த்துள்ளார். இதில், மூன்று அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வன ஆர்வலர் பாம்பைப் பிடித்து, பாட்டிலில் அடைத்து பத்திரமாக காப்பு காட்டு பகுதியில் விட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.