மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினர் தொடர்ந்து 5 நாட்களாக செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், ரயிலடி என நகரைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பகுதியில் முகாமிட்டு, கூண்டுகளை வைத்து சிறுத்தையைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில், குத்தாலம் தாலுகாவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை சுற்றித் திரிந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், நேற்று பாலையூர் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில், அங்கு பதிவானது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானதை அடுத்து, அப்பகுதியில் 15 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து கணகாணிப்பைத் தீவிரப்படுத்தினர்.