மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இரவு சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியது. இதனால், சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் அடுத்த தூக்கணாங்குளத்தில் உள்ள கருவேலங்காடு பகுதியில் பதுங்கி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வனக் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து 3 ராட்சச கூண்டுகள், வலைகள், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், கருவேலங்காட்டில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள குட்ஸ் யார்ட் நடைமேடையில் ஒரு ஆட்டினை சிறுத்தை கொன்றதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன் மயிலாடுதுறைக்கு வந்தார். கருவேலங்காட்டில் சிறுத்தை நடமாடிய பகுதியில், 8 மோப்ப நாய்கள் மற்றும் வேட்டை நாய்கள் மூலம், வனத்துறையினருடன் நேரில் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சென்சார் கேமராவில் பதிவாகியிருந்த சிறுத்தையின் புகைப்படத்தை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர்.