தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் கொலையா? தடயவியல் துறை தகவல்! - Nellai congress leader jayakumar

Tirunelveli congress leader Jayakumar: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் மரப்பலகையில் மின் வயரால் கட்டப்பட்டு இருந்ததாகவும், உடம்பில் சில இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாக தடய அறிவியல் துறையினர் ஆய்வு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் புகைப்படம்
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் புகைப்படம் (Credits to Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 7:08 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். கடந்த இரண்டு தினங்களாக ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின், இன்று உவரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக உவரி போலீசார் வழக்குப் பதிவு செய்து (வழக்கு எண் 89/2024), அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் காணாமல் போன நிலையில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடய அறிவியல் துறையினர் நேரில் சென்று தடயங்களைச் சேகரித்தனர். இந்த நிலையில் தான் ஜெயக்குமார் உடலைப் பரிசோதித்த போது, அவரது உடல் மரப்பலகையில் மின் வயரால் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், உடம்பில் சில இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, பலகையில் கட்டப்பட்டு கொடூர முறையில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, ஜெயக்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு மரண வாக்குமூலம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே வி தங்கபாலு உட்பட ஆறு பேர் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், ரூபி மனோகரன் தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்றும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவரை நம்பி 8 லட்சம் ரூபாய் செலவு செய்து, அந்த பணத்தையும் திரும்பத் தரவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், கே.வி தங்கபாலு கூறியதால் தேர்தலில் 11 லட்சம் செலவு செய்ததாகவும், அந்த பணத்தை ரூபி மனோகரனிடம் கேட்கும்படி தங்கபாலு கூறியதாகவும், ஆனால் ரூபி மனோகரன் அந்த பணத்தையும் திரும்பத் தரவில்லை என்றும் தனது மரண வாக்குமூலத்தில் ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

ஏற்கனவே, திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியில் கடும் கோஷ்டி பிரச்னை நிலவுகிறது. எனவே, ஜெயக்குமார் மரணத்திற்குச் சொந்தக் கட்சி பகை காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஜெயக்குமாரின் மரணம் கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் ஜெயக்குமார் உடல் வயரால் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்ததால், மர்ம நபர்கள் அவரை கட்டிவைத்து தீ வைத்து எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், உயிரிழந்த ஜெயக்குமாருக்கு அளவுக்கு அதிகமான கடன் பிரச்னை இருந்து வந்ததாகவும், இந்த கடன் தொல்லையால் அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தற்கொலையா அல்லது கொலையா என்ற இரண்டு கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற தோட்டத்திற்கு அருகே உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் மாவட்ட காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே 2ஆம் தேதி ஜெயக்குமார் வீட்டை விட்டுச் சென்ற நிலையில் இரண்டு நாட்களாக அவர் வீடு திரும்பவில்லை. எனவே, கடைசியாக அவரது செல்போன் எந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டது, அவர் வீட்டிலிருந்து நேராக எங்கு சென்றார், யார், யாரைச் சந்தித்தார் என போலீசார் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சம்பவ இடத்தில் எஸ்.பி சிலம்பரசன் நேரடியாக ஆய்வு செய்து, வழக்கின் தன்மை குறித்து அங்கிருந்த காவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:பாதி எரிந்த நிலையில் கிடந்த காங்., நிர்வாகி ஜெயக்குமார் சடலம்.. பரபரப்பை கிளப்பும் புகார் கடிதம்.. நெல்லையில் நடந்தது என்ன? - Nellai Congress Leader Jayakumar

ABOUT THE AUTHOR

...view details