தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி உள்ளிட்டவைகள் பறிமுதல் - lok sabha election 2024

Lok Sabha Election 2024: தூத்துக்குடியில், தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக் கொண்டு சென்ற கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த பறக்கும் படை அவற்றை பறிமுதல் செய்தது.

election flying squad
election flying squad

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 8:47 AM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, தற்போது தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் 3ஆம் மைல் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா தலைமையில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துத் தலைவருமான சரவணகுமார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அந்த காரில் திமுக விளம்பரம் பொறித்த பாக்கெட் காலண்டர்கள் 195, திமுக விளம்பரம் அடங்கிய கீ செயின்கள் 800, தொப்பிகள் 450, திமுக தலைவர் ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்ட 500 கீ செயின்கள், 1,900 ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்கள் அனைத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் மற்றும் காரில் இருந்த பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன், காரை ஓட்டிவந்த மாப்பிளையூரணியைச் சேர்ந்த சுரேஸ் பிரபு என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "பாஜக வீட்டுக்கும் கேடு.. நாட்டுக்கும் கேடு.." - விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details