சென்னை:ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில், நேற்றிலிருந்து கனமழை பெய்து, மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று இரவு துபாயில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் இன்று அதிகாலை துபாயில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்து விட்டு மீண்டும் அதிகாலை சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு செல்ல வேண்டிய ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நேற்று இரவு சென்னையில் இருந்து குவைத் சென்று விட்டு இன்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.