சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளான பிஏ எல்எல்பி(BA LLB) (ஹானர்ஸ்),பிபிஏ எல்எல்பி (BBA LLB) (ஹானர்ஸ்), பிகாம் எல்எல்பி (BCom LLB) (ஹானர்ஸ்), பிசிஏ எல்எல்பி (BCA LLB) (ஹானர்ஸ் ) ஆகியப் பாடப்பிரிவுகளில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களிலும், இணைப்பு பெற்ற கல்லூரிகளில் உள்ள பிஏ எல்எல்பி படிப்பில் 2 ஆயிரத்து 43 இடங்கள் என 2 ஆயிரத்து 67 இடங்களில் சேர்வதற்கு மே 10 ஆம் தேதி முதல் 31 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் இன்று துவகங்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் விண்ணப்பப்பதிவினை துணைவேந்தர் சந்தோஷ்குமார் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை (பட்டறைபெரும்புதூர், புதுப்பாக்கம்), மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, காரைக்குடி ஆகிய இடங்களில் உள்ள 14 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன.
மேலும், சேலம் மத்திய சட்டக்கல்லூரி, திண்டிவனம் சரஸ்வதி சட்டக்கல்லூரி, புதுக்கோட்டை மதர் தெரசா சட்டக்கல்லூரி, திண்டுக்கல் ஜிடிஎன் சட்டக்கல்லூரி, திருப்பூர் கேஎம்சி சட்டக்கல்லூரி, ஈரோடு சட்டக்கல்லூரி, தென்காசி எஸ் தங்கப்பழம் சட்டக்கல்லூரி, தூத்துக்குடி துளசி மகளிர் சட்டக்கல்லூரி, கன்னியாகுமரி முகில் சட்டக்கல்லூரி ஆகியவை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கல்லூரி நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றி சேர்க்கை நடைபெறும். கல்வித்தகுதியாக அரசு சட்டக்கல்லூரிகளுக்கு 12 ம் வகுப்பு தேர்வில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் 40 சதவீதம் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சீர்மிகுச் சட்டப்பள்ளியில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 12 ம் வகுப்பு தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் முதல்முறையிலேயே தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். வயது உச்சவரம்பு எதுவும் பின்பற்றப்படுவதில்லை. https://www.tndalu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் வழங்கும் தகவல் அடிப்படையில் மட்டுமே தர வரிசை மற்றும் வெட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது? விடைத்தாள் நகல் பெறுவது எப்படி? - 10th Supplementary Exam Date