திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறுத்தையைத் தேடியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்து சிறுத்தை, அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் தாவியுள்ளது.
அதன்பின், பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார்செட்டிற்குள் நுழைந்தது. சிறுத்தை பதுங்கி இருந்த கார் செட்டில் இரண்டு கார்கள் இருந்தன. அதில் ஒரு காரில் பாஸ்கர், இம்ரான், தினகரன், சுவாமிஜி ஆகிய நான்கு பேரும், மற்றொரு காரில் எம்ஜிஆர்(எ) வெங்கடேஷ் உள்ளிட்ட 5 நபர்கள் சிக்கிக்கொண்டு தவித்தனர். காரில் சிக்கிய 5 நபர்களை மீட்பதில் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடினர். சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஐந்து நபர்களை பத்திரமாக மீட்டனர்.