தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 132 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்; விற்பனை செய்த 5 பேர் கைது! - DRUGS SEIZED CASE IN THOOTHUKUDI

தூத்துக்குடியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து 132 கிலோ போதைப்பொருட்களும், விற்பனைக்கு பயன்படுத்திய வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருட்கள் விற்பனை செய்த 5 பேர் கைது
போதைப்பொருட்கள் விற்பனை செய்த 5 பேர் கைது (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 10:58 PM IST

தூத்துக்குடி :தூத்துக்குடியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தூத்துக்குடிக்கு கடத்தி வந்து வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைத்து, நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தது.

கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamilnadu)

இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா, சுரேஷ், விஜயகுமார், எபனேசர், சுந்தர்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் 132 கிலோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க :அம்பத்தூர் அருகே புதரில் பதுக்கிய 500 கிலோ குட்கா பறிமுதல்! - 500 kg Gutka Seized In Chennai

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வடபாகம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்புக் கழகம் சார்பில் வந்த தகவலை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த கும்பலை கைது செய்துள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடுப்பதில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் ரூ.25,000 முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details