வேலூர்: சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்திச் சென்ற ஐந்து பேரைக் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, மூட்டை மூட்டையாக போதைப் பொருள் கடத்தி, போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு பெங்களூரில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை சிலர் கடத்திச் செல்வதாக வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சத்துவாச்சாரி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் பிள்ளையார் குப்பம் சர்வீஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் அதிவேகமாக வந்த வாகனத்தை நிறுத்திய போலீசார், வாகனத்தில் இருந்த மூட்டைகளைப் பிரித்து சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, அதில் மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, சட்டவிரோதமாக வெளி மாவட்டங்களில் விற்பனை செய்ய போதைப் பொருட்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்கள் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) ஐந்து பேர் கைது:
அதனைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த அப்சர் பாஷா (34), காட்பாடி பகுதியைச் சேர்ந்த அக்சய் குமார் (27), சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷிகில் (35) மற்றும் முகமது ரபிக் (34), சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (61) ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த சத்துவாச்சாரி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கொலை; திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது! பரபரப்பு வாக்குமூலம்..
போலீசாரின் விசாரணையில் குட்கா பொருள்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் வேறு எவருக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் அளவு குறித்தும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்த போதைப் பொருட்களின் விவரம்:
ஹான்ஸ் 2,750 கிலோ, கூல் லிப் 50 கிலோ என மொத்தம் 2,800 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம், ஒரு மூன்று சக்கர வாகனம் (LOAD AUTO) மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் (VAN) என மூன்று வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.