புதுக்கோட்டை:புதுக்கோட்டை அடுத்த இளங்குடிபட்டியில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 'நகர சிவ மடம்' என்ற மடம் உள்ளது. இந்த மடத்திற்கு முன்பாக கார் ஒன்று முன்பக்க ஜன்னல் திறக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் நின்றுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நகர சிவ மடத்தில் பணிபுரியும் காவலாளி அடைக்கலம் என்பவர் சென்று, காரில் திறக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது முன்பக்கத்தில் இருவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி அடைக்கலம் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடன் தொல்லை: இந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நமணசமுத்திரம் காவல்துறையினர் காரை திறந்து பார்த்தபோது, அந்தக் காரில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் சடலமாக கிடந்தவர்கள் தாய், தந்தை அவர்களது மகன், மகள் மற்றும் மாமியார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அந்தக் காரில் மது பாட்டில்களும், கப்புகளும் இருந்த நிலையில் ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனரா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் சடலமாக கிடந்த காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை செய்தபோது, அந்த பதிவை கொண்ட கார் சேலம் மாவட்டம், ஆத்தூர் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர்கள் சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகே உள்ள ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த கணவன் மணிகண்டன் (50), மனைவி நித்யா (48), இவர்களது மகன் தீரன் (சென்னை கல்லூரியில் படித்து வந்தார்), மகள் நிகரிகா (பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்), மாமியார் சரோஜா (70) ஆகிய ஐந்து பேர் என்பது தெரிந்தது.
இதையும் படிங்க:பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை.. பதறிய திண்டுக்கல்.. போலீசார் தீவிர விசாரணை!
இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் 3 மாதங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். மணிகண்டன் அவரது வீட்டிலேயே எஸ்எம் மெட்டல் என்ற அலுவலகம் நடத்தி வந்ததாகவும் கிருஷ்ணகிரி நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் காப்பர் நிறுவனமும் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் தொல்லை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதும், காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், காரில் இருந்த கடிதத்தில், ''தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் தகவல் அளித்தால் அவர்களே எங்களுடைய உடல்களை அடக்கம் செய்து விடுவார்கள்'' என்றும் அந்த கடிதத்தில் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் சோதனைக்கு பிறகு, காரில் இருந்த ஐந்து பேரின் சடலத்தையும் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நமணசமுத்திரம் காவல்துறையினர், சேலம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர்? எதற்காக நகர சிவ மடம் அருகே காரை நிறுத்தினர்? உண்மையிலுமே அவர்களுக்கு கடன் பிரச்சனை இருக்கிறதா? தற்கொலைதான் செய்துகொண்டனரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்