விருதுநகர்:சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் தேவதானத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பழனியம்மாள். இவர் சுக்கிவார்பட்டி பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், லிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகிய யாரும் வீட்டை விட்டு நீண்ட நேரம் வெளியே வராத காரணத்தினால், அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்ததில் லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆனந்தவள்ளி, ஆதித்யா, அவர்களின் பேத்தியான 2 மாத குழந்தை சசிகா ஆகிய ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்த ஐந்து பேரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஐந்து பேர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாத குழந்தை உட்பட உயிரிழந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.