தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழில் செயற்கை நுண்ணறிவு - ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு -அமைச்சர் தங்கம் தென்னரசு! - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்

Tamilnadu Budget 2024: தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாடு மேம்பாட்டிற்காகத் தமிழக பட்ஜெட்டில் சுமார் ரூ.38 கோடியே 65லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

tamilnadu budget
தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 11:17 AM IST

Updated : Feb 19, 2024, 3:23 PM IST

அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாடு மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மொழி வளர்ச்சி: தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளைச் சென்றடையும் வகையில் அவற்றை மொழி பெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

மேலும், உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இந்த ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் இதுவரை 340 மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

தமிழ் மொழி செழித்து வளர இயந்திர வழிக் கற்றல் (machine learning), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) இயற்கை மொழிச் செயலாக்கம் (natural language processing), பெருந்திரள் மொழி மாதிரிகள் (large language model) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்திட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாடெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 2024- 25ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம்- கீழடி, விருதுநகர் மாவட்டம் -வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் - பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம்- கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் - திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் - கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம்-மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - சென்னானூர் ஆகிய எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், கேரளாவில் முசிறி, ஓடிசாவில் பாலூர், ஆந்திராவில் வெங்கி, கர்நாடகாவில் மஸ்கி ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்த வெளி தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.

நவீன மரபணுவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழ் மக்களின் தொன்மை, இடம் பெயர்வு, வேளாண்மை பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவுப் பழக்கங்களைக் கண்டறிய மதுரை காமராசர் பல்கலைக் கழக மரபியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல் மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல் மரபியல் ஆய்வினை மேற்கொள்ள ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய கடல்சார் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சார் நிறுவனங்களோடு இணைந்து கொற்கை மற்றும் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளில் கடலோரங்களில் ரூ.65 லட்சம் செலவில் முன்கள ஆய்வும், ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

சிந்துவெளிப் பண்பாடு குறித்து அறிவிப்பு முதன்முதலில் கடந்த 1924 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டுக் கருத்தரங்கம், பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:TN Budget Live Update: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!

Last Updated : Feb 19, 2024, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details