தருமபுரி: தருமபுரி இலக்கியம்பட்டியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் தருமபுரி வி.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
நெஞ்சை உலுக்கிய கொலை: கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசு பாதம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனரஞ்சன், ஜனப்ரியன் ஆகிய இரட்டை சகோதரர்கள், கௌதம் என்ற இளைஞர் மற்றும் நல்லம்பள்ளி சிவாடிபகுதியைச் சேர்ந்த பரிதிவளவன் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
கலப்பு திருமண தம்பதி: விசாரணையில் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் (கொலை செய்யப்பட்டவர்) சேலத்தில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ கேட்டரிங் படித்தபோது அங்கு படித்த ஜனரஞ்சன், ஜனப்ரியன் ஆகியோரின் சகோதரியை மூன்று ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. முகமது ஆசிக்கின் தந்தை ஜாவித் மற்றும் அவரது தாய் கலப்பு திருமண தம்பதி என தெரியவந்துள்ளது. முகமது ஆசிக் தாய் வழி உறவினர் தான் ஓமலூர் இரட்டை சகோதரர்களின் சகோதரி என தெரிய வருகிறது.
பெண் கொடுக்க மறுப்பு: உறவினர் என்ற முறையில் இரட்டை சகோதரர்களின் சகோதரி முகமது ஆகிக்கிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் காதலாக மாறி மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், முகமது ஆசிக்கிடம் காதலி தனது வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து முகமது ஆசிக்கும் தனது தந்தை தாயுடன் ஓமலூர் சென்று பெண் கேட்டுள்ளனர்.