சென்னை:ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் வழக்கம் போல் வங்கக் கடலையொட்டிய கிழக்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் அது முடிவடைகிறது.
இதனால், இன்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்குச் சென்று மீன் பிடிக்கத் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர் நல கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.8 ஆயிரம் தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 1.60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் 61வது நாளான இன்று முடிவடைவதால், காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வர்ணம் பூசுவது, மீன்பிடி வலைகளை சரி செய்து விசைப்படகில் ஏற்றுவது, விசைப்படகை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மீனை பதப்படுத்துவதற்காக ஐஸ் பார்களை நிரப்புவது, குடிநீர் கேன், உணவுப்பொருட்கள், சமைக்கப் பயன்படுத்தும் சிலிண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வது, விசைப்படகுக்கு டீசல் நிரப்புவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பைக்கிற்கு டியூ கட்டவில்லை என புகார்.. பெண்ணை தாக்கியதாக ஊழியர் மீது வழக்குப்பதிவு!