தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேஆர்பி அணையில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! - fishes died in KRP Dam - FISHES DIED IN KRP DAM

KRP Dam: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மீன்கள் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கேஆர்பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என தெரிய வந்துள்ளது.

கேஆர்பி அணையில் இறந்து கிடக்கும் மீன்கள்
கேஆர்பி அணையில் இறந்து கிடக்கும் மீன்கள் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 10:27 PM IST

கிருஷ்ணகிரி: கேஆர்பி அணையில் மீன்கள் செத்து மிதப்பதால் ஆய்வு செய்யப்பட்ட தண்ணீரில் வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட், அம்மோனியா அதிகமாக உள்ளதும், நீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், கே.ஆர்.பி அணையில் உள்ள நீர், மீன்கள் வாழ தகுதியில்லாதது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் ஆண்டுதோறும் தண்ணீர் சேமிக்கப்பட்டு, இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீன்வளத்துறை சார்பில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, குத்தகை முறையில் மீன் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் மீன்பிடி குத்தகை எடுக்கப்பட்டு, கடந்த நான்காண்டுகளாக மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழை இல்லாத காரணத்தினால், அணையின் நீர்மட்டம் 38 அடிக்கு கீழே சென்றது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக, கடந்த ஐந்து நாட்களாக கேஆர்பி அணைக்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், கேஆர்பி அணையில் வளர்க்கப்பட்ட மீன்கள் இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதாகவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மீனவர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், மீன்வளத்துறை அதிகாரிகள் கேஆர்பி அணை நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரை சேகரித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆய்வில், “கேஆர்பி அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள தண்ணீரில் வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட், அம்மோனியா அதிகரித்துள்ளது. இதனால் மொத்த காரத்தன்மை 600 மில்லி கிராம் உள்ளது. 40 முதல் 400 பிபிஎம் வரை மட்டுமே இருக்க வேண்டும். இதன் காரணமாக, தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. மேலும், இந்த நீரில் மீன் உயிர் வாழ்வதற்கான மிகவும் ஆபத்தான பாதிப்புகள் காணப்படுகிறது. எனவே, இந்த நீரில் மீன்கள் வாழ்வதற்கான தன்மை இல்லை” என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆய்வு அறிக்கையில் மேற்கண்ட நைட்ரைட் நைட்ரேட் அம்மோனியா அதிகரிக்க என்ன காரணம்? எதனால் ஆக்சிஜன் குறைந்தது? ரசாயனம் கலந்த நீரால் இவை ஏற்பட்டதா? அல்லது அதிக அளவில் பாசி படந்ததால் நிகழ்ந்ததா? அல்லது அதிக வெப்பம் காரணமாக நிகழ்ந்ததா? என்கிற விபரம் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஜெண்டர் ரிவீல்' செய்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்! - Irfan Gender Reveal Issue

ABOUT THE AUTHOR

...view details