சென்னை:நொச்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியில் வியாபாரம் செய்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றனர். எனவே, நவீன மீன் அங்காடியை மறு சீரமைப்பு செய்து தர வேண்டும் எனவும், அதுவரையில் கடற்கரையோரம் லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீன் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மெரினா கடற்கரையை அடுத்த லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளனர். ஆனால், இப்பகுதி ஒருவழிப் பாதையாகவும், குறுகிய பாதையாகவும் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நொச்சிக்குப்பம் பகுதிவாசி முத்து, மீன் வியாபாரிகள் மோகனா மற்றும் நீலாவதி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) நவீன மீன் அங்காடி:
இதனையடுத்து, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில், நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி நொச்சிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 366 மீன் கடைகளுடன் இந்த நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
நொச்சிக்குப்பம் நவீன மீன் அங்காடி (ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், இந்த நவீன மீன் அங்காடியில் வியாபாரம் செய்வதில் சிக்கல்கள் இருப்பதாக மீன் வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இது குறித்து, பாதிக்கப்பட்ட மீன் வியாபாரிகள் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்பின்னர், ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு மீனவ மக்கள் சிறப்புப் பேட்டி அளித்துள்ளனர்.
பூங்கா போன்ற மீன் அங்காடி:
அப்போது பேசிய மீன் வியாபாரி மோகனா கூறுகையில், “நொச்சிக்குப்பம் லூப் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகிறோம். மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு 2015-ல் மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர், 2023-ல் மீண்டும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கினர். ஆனால், இதில் பாதி பேருக்கு நொச்சிக்குப்பம் என்றும், மீதி பேருக்கு ராயப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டது. இதனால், ராயப்பேட்டை என்று குறிப்பிட்ட அடையாள அட்டைதாரர்கள் மீண்டும் அட்டையைத் திருப்பி கொடுத்துவிட்டனர்.
இதையும் படிங்க:மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா-இலங்கை நாடுகள் மனிதநேய அணுகுமுறையை மேற்கொள்வது ஏன்?
இதனையடுத்து, நவீன மீன் அங்காடியை அரசு அமைத்தது. இதில், நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரை 360 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நொச்சிக்குப்பத்திற்கு வெறும் 270 கடைகள் மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளனர். விற்பனை செய்யும் இடத்தில் சண்டையும், சச்சரவுமாக உள்ளது. சண்டை வந்தாலும் கடையை விட்டு வெளியே வரக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். நவீன மீன் அங்காடி பூங்கா போன்று உள்ளது.
என்னுடைய கடையின் எண் 319, மூன்றாவது வரிசையில் உள்ள எனது கடையின் முகப்பு புறம் சுவரைப் பார்த்து இருக்கிறது. இதனால், மீன் வாங்க வரும் மக்கள் முதற்வரிசையில் உள்ள கடைகளில் மட்டும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், உட்பகுதியில் இருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நீதிபதி போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய அறிவுறுத்தினார். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இதை தன்னிச்சையாக கையில் எடுத்துக்கொண்டு இவ்வாறு செயல்படுகின்றது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நொச்சிக்குப்பம் நவீன மீன் அங்காடி (ETV Bharat Tamil Nadu) மறு சீரமைப்பு செய்து தர வேண்டும்:
இதனையடுத்து பேசிய மீன் வியாபாரி நீலாவதி பேசியதாவது, “மீன் அங்காடியில் விற்பனை செய்வதற்கு வாங்கி வரும் மீன்களை, ஒரு நாளைக்கு மேல் வைக்க முடியவில்லை. அங்காடியில் மேலே போட்டிருக்கும் மேற்கூரையானது அதிக வெப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் உள்ளது. இதனால், மீன்கள் எளிதில் கெட்டுப் போகிறது. கடலோரம் வியாபாரம் செய்யும்போது இரண்டு நாட்கள் காட்ந்தாலும், மீன்கள் கெட்டுபோகாது.
எங்களால் அந்த பகுதியில் வியாபாரம் செய்ய முடியவில்லை. எனவே, முதலமைச்சர் இப்பகுதியில் வந்து அனைத்தையும் பார்வையிட்டு, நவீன மீன் அங்காடியை மறு சீரமைப்பு செய்து தர வேண்டும். அதுவரையில் லூப் சாலையில் கடற்கரையோரம் மீன் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கோரிக்கை வைத்தார்.
மீனவ சமுதாயம் அழியும் அபாயம்:
அதன் பின்னர் அப்பகுதியை சேர்ந்த முத்து பேசுகையில், “நீதிபதி ஒரு நாள் லூப் சாலையில் செல்லும் பொழுது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளவற்றை சீரமைக்க வேண்டும் என்று அறிக்கை பிறப்பித்தார். அதன்படி, சாலையில் மேற்கு பகுதியில் இருக்கக்கூடிய கடைகளை அகற்ற வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அகற்றப்பட்ட கடைகளை ஒழுங்குப்படுத்தி அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையை சென்னை மாநகராட்சி மறைத்துவிட்டு, மொத்த கடைகளையும் அகற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர். ஒருவழி சாலை என்று அங்கிருந்த மீன் வியாபாரிகளை அகற்றிவிட்டு, நீலக்கொடி கடற்கரை திட்டம் என்று ஒரு டெண்டர் விடுத்துள்ளனர். தற்போது, நவீன மீன் அங்காடியில் மீன் வியாபாரம் செய்ய முடியாத காரணத்தினால், அனைவரும் பார்க்கிங்கில் வந்து கடையை போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்துள்ளோம். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வியாபாரிகள் கடந்த 4 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையl, மீண்டும் மற்றொரு லூப் சாலையை அழகுபடுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக நீலக்கொடி கடற்கரை திட்டம் நொச்சிக்குப்பம் பகுதியில் வருவதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சம் உள்ளது.
நீலக்கொடி கடற்கரை திட்டம் நொச்சிக்குப்பம் பகுதியில் வருமேயானால், மீனவ சமுதாயமே அழித்துவிடும். நாங்கள் இதுவரையில் நீதிமன்றத்தை நாடவில்லை. சென்னை மாநகராட்சி ஆணையாளர் எங்கள் குறைகளை சரி செய்வார் என்று நம்பிக்கை உள்ளது. அது தவறும் பட்சத்தில் எங்களிடம் இருக்கும் நீதிமன்ற ஆணைகளை வைத்து வழக்கு பதிவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.