கோட்புட்ல்(ராஜஸ்தான்): ராஜஸ்தானின் கிராத்பூர் கிராமத்தில் உள்ள 700 அடி போர்வெல் குழியில் விழுந்த சேத்னா என்ற சிறுமியை மீட்க்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
கிராத்பூர் கிராமத்தில் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாரத விதமாக அங்கிருந்த மூடப்படாத போர்வெல் குழியில் கடந்த திங்கள் கிழமை மதியம் 1.30 மணிக்கு விழுந்தார். சிறுமியை மீட்பதற்காக உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை படை, மாநில பேரிடர் மேலாண்மை படை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றை சேர்ந்தோர் இரவு பகலாக சிறுமியை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதலில் இரும்பு கம்பியை குழியில் செலுத்தி அதனை பிடித்தபடி குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், 24ஆம் தேதி இரவு இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து போர்வெல் குழிக்கு அருகே குழி தோண்டும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதையும் படிங்க: "மாதவிடாய் என கூறியும் விடவில்லை" - அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை
மீட்பு பணிகுறித்து பேசிய கோட்புட்ல் சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட் பிரிஜேஸ் சவுத்ரி, "போர்வெல் குழிக்குள் 15 இரும்பு கம்பிகள் உள்ளே செலுத்தப்பட்டு சிறுமியை மீட்க முயற்சிகள் நடைபெற்றன. 150 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி 30 அடி வரை மேலே தூக்கப்பட்டுள்ளார். நிலத்தை துளையிடும் இயந்திரம் ஃபரிதாபாத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி குழி தோண்டப்பட்டு குழந்தை விரைவில் மீட்கப்படுவார். குழந்தையை உயிரோடு மீட்பதே மீட்பு குழுவின் முதன்மையான நோக்கமாக உள்ளது. எனினும் இன்னும் குழந்தையை மீட்க முடியவில்லை. குழி தோண்டும் இயந்திரம் வந்த பின்னர் குழி தோண்டுவதற்கு சுமார் 7 மணி நேரம் ஆகும்," என்றார்.
மீட்பு பணி குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஓபி சரண், "போர்வெல் குழிக்குள் விழுந்த சிறுமி 150 அடியில் இருந்தார். இப்போது அவரை 30 அடிக்கும் மேலே கொண்டு வந்திருக்கின்றோம். அவரை விரைவில் மீட்போம். தொடர்ந்து அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது,"என்றார். மாவட்ட நிர்வாகம், மருத்துவ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தயாராக உள்ளனர். எந்த வித இடையூறும் இன்றி மீட்பு பணி தொடர்வதற்காக அந்தப் பகுதியை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.