சென்னை:சென்னை, அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் தனியார் மெட்டல் ஷீட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் அந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட தொழிற்சாலை ஊழியர்கள், உடனடியாக தொழிற்சாலையிலிருந்து வெளியேறி, அம்பத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், அதற்குள் தீயானது தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியுள்ளது. பின்னர் தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அதனால், அப்பகுதியில் இருந்த நபர்களுக்கு மூச்சுத் திணறலும், கண்ணெரிச்சலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர்களும் வெடித்ததால், அப்பகுதியில் மேலும் பதற்றம் நிலவியது. அதுமட்டுமின்றி, தொழிற்சாலையின் அருகே பெட்ரோல் பங்க் வேறு இருந்ததால், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சாலையை முடக்கி பாதுகாப்பாக தீயை அணைக்க வழிவகை செய்தனர். ஆகையால், தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை லாவகமாக அணைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கது.