திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்தவர் நாகன் என்கிற மருதமுத்து, கந்தவேல் என்கிற திரைப்படத்தை தயாரித்து பல்வேறு காரணங்களால் வெளியிடாமல் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்றும், தான் முறையாக பதிவு செய்து வைத்துள்ள கதையை திருடி படமாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருதமுத்து, "பழனி அருகே உள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஒரு கதையை எழுதி என்னிடம் கூறினார். கதை நன்றாக இருந்ததால் அதனை 10 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினேன். அக்கதையை அத்தியாயம் ஒன்று என பெயரிட்டு 2020ஆம் ஆண்டே முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன். இந்நிலையில் அத்தியாயம் என்ற கதையை குறும்படமாக எடுத்து, அதனை எடிட்டிங் செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்தேன்.
பின்பு அத்தியாயம் ஒன்று திரைக்கதையை திரைப்படமாக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் சார்லி மற்றும் நடிகை ரக்ஷனா ஆகியோரிடம் கதையை கூறி, 5.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பழனியில் படப்பிடிப்பு நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில் பழனியில் கனமழை பெய்ததால், படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறினார்.
இதனிடையே விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த போது, தான் முறையாக பதிவு செய்திருந்த அத்தியாயம் ஒன்று திரைக்கதையை அப்படியே படமாக்கி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.