சென்னை:தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர், மாநில திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அதில், நான்காவது திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சரின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட பணிகளான, 'புதுமைப் பெண்' திட்டத்தின் தாக்கம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம், 'எண்ணும் எழுத்தும்' திட்டச் செயலாக்கத்தின் மதிப்பீடு போன்ற ஆய்வுகளின் முடிவுகள் குறித்தும் விவரித்தார்.
மேலும் மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களான, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம், தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய பணிகள் பற்றியும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகள் பற்றியும் விரிவாக விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பவர்களாக மட்டுமல்லாமல், அதில் உள்ள நிறைகுறைகளை எடுத்துச் சொல்பவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த வகையில் எனக்கும், இந்த அமைச்சரவைக்கும், ஆட்சிக்கும் மிக மிக முக்கியமான வழிகாட்டிகளாக அமைந்துள்ளீர்கள்.
கடந்த மார்ச் மாதம் என்னைச் சந்தித்த துணைத் தலைவர் ஜெயரஞ்சன் துறை சார்ந்த 16 அறிக்கைகளை அளித்தார். தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாக மாணவர்கள் மட்டுமல்ல, கல்வித் துறையில் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற சுகாதாரம் எந்தளவுக்கு மேன்மை அடைந்துள்ளது? நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு கூடிவருவதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன" எனக் கூறினார்.
சமூகத்தை மேம்படுத்திய திட்டங்கள்: தொடர்ந்து பேசிய அவர், "நமது அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது என்பதை அறிந்தேன். இதனைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.
மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது. இந்த தகவல்களை எல்லாம் மக்களிடமிருந்து நேரடியாக நாங்கள் அறிந்தாலும், புள்ளிவிவரங்களாக நீங்கள் வழங்கி வருகிறீர்கள். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்" என்றார்.
வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்:மேலும் பேசிய முதலமைச்சர், "வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்று முதல்வர் பேசினார்.