தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் சிறு வணிகக் கடன் வழங்கும் சிறப்பு முகாம்.. புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்ட மக்களுக்கு அரசின் ஆறுதல் நடவடிக்கை! - FENGAL CYCLONE AFFECTS

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம் நடைபெறவுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம் -கோப்புப்படம்
தலைமைச் செயலகம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 8:59 PM IST

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைபடி, கூட்டுறவுத்துறையின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவணிகர்களுக்கான "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் நடைபெறவுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், " தமிழ்நாட்டில் நவம்பர் 30 ஆம் தேதி வீசிய "ஃபெஞ்சல்" புயல் காரணமாக வடமாவட்டங்களில் பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக சிறுவணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, சிறுவணிகர்களுக்கு உதவிகரம் நீட்ட வேண்டிய அவசரத்தேவையை கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" மூலம் முகாம் அமைத்து கடன் வழங்கப்படவுள்ளது.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000/- முதல் ரூ.1 இலட்சம் வரை சிறுவணிகக்கடன் வழங்கப்படவுள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க), அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.

எப்போது, எங்கு முகாம்?:இந்த "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம்கள் மேற்கண்ட மாவட்டங்களில் 06.12.2024 முதல் 12.12.2024 வரை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மரக்காணம், திருக்கோவிலூர், பெரியசெவலை, கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி ஆகிய கிளைகளிலும், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மஞ்சகுப்பம், செம்மண்டலம், கூத்தப்பாக்கம், நெல்லிகுப்பம், பண்ருட்டி ஆகிய கிளைகளிலும் நடைபெறவுள்ளது. இந்த ”சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” முகாம்களில் சிறுவணிகர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் " என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details