தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த 25, 27, 20 வயது மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற போது அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பாப்பாநாடு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என்.அழகேசன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் யார்?, மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர் யார்?, அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது?, ஏன் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது? என்பதை நீதிமன்றத்தில் வரும் 27ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.