சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதத்துடன் கடும் தண்டனை: கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இதன்படி தண்டனை பெறுவோர் அல்லது குற்றம் சாட்டப்பட்டோர் ஜாமீன் கோர முடியாது. அதேநேரம், ஜாமீன் வேண்டும் என்றால் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.
இதேபோல, மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதிய இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்கும் நடவடிக்கை:தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது. எனவே தான், கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்றும் அரசு கருதுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.