தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. மருமகனை கொல்ல முயன்ற மாமனார் குண்டர் சட்டத்தில் கைது.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன? - TIRUVANNAMALAI MURDER ATTEMPT

THIRUVANNAMALAI MURDER ATTEMPT: மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 7:04 PM IST

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் (Credits -ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை:செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பூசாரி ஜானகிராமன் என்பவர், அப்பகுதியில் காளியம்மன் கோயில் அமைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விஜி என்ற இளைஞர் ஜானகிராமனுடன் நெருங்கி பழகி அவருடன் கோயில் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், விஜி மற்றும் ஜானகிராமன் மகள் ஜெயஸ்ரீ இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கு பெண் வீட்டார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்த நிலையில், பாதுகாப்பிற்காக செங்கம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, காதல் திருமணம் செய்த இருவரும் செங்கம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் திருமணத்தை ஏற்காத பெண்ணின் தந்தை திருமணமாகி ஐந்து மாதங்களுக்கு பிறகு கூலிப்படையை அனுப்பி தனது மகளின் கணவனை கொலை செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் படி, கடந்த மாதம் பெட்ரோல் பங்கில் இரவு பணியில் இருந்த விஜியை கூலி படையினர் அரிவாளால் சராமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த அரவிந்த சாமி என்ற நபரையும் வெட்டி விட்டு கூலிப்படை தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட செங்கம் போலீசார், விஜியை கொலை செய்ய முயற்சி செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக பூசாரி ஜானகிராமன், செங்கம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்த மதிவாணன் மற்றும் அறிவு என்ற மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளார். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டி.குமாரமங்கலம் விவகாரம்; ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில்! - Minister Regupathy

ABOUT THE AUTHOR

...view details