தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூட்கேஸில் கிடந்த மூதாட்டி சடலம்.. மீஞ்சூரில் தந்தை, மகள் சிக்கியது எப்படி?

ஆந்திராவில் கொலை செய்துவிட்டு, உடலை சூட்கேஸில் வைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வீச முயற்சி செய்த தந்தை மற்றும் மகள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MINJUR RAILWAY STATION
மீஞ்சூர் ரயில் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 7:47 AM IST

திருவள்ளூர்:நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில், நேற்று முன்தினம் (நவ.4) இரவு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது அதிலிருந்து இறங்கிய தந்தை, மகள் இருவரும், சூட்கேஸ் ஒன்றை ரயில் நிலைய நடைமேடையில் இறக்கி வைத்து விட்டு வேகமாகச் செல்ல முயன்றுள்ளனர். அதனைக் கண்ட கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர், உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்து, பின்னர் சூட்கேஸ் அருகே வந்து பார்த்தபோது, அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் சந்தைபேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (43) மற்றும் அவரது 17 வயது மகள் என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் வர மறுத்து, அவரை தலையில் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், பின்னர் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ரயிலில் ஏறி மீஞ்சூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டுச் செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை!

பின்னர், இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதையடுத்து, போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, கை, கால்களை மடக்கி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் உள்ளே இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இரவு முழுவதும் நடத்திய விசாரணையில், பொற்கொல்லரான பாலசுப்ரமணியம், நெல்லூரைச் சேர்ந்த மூதாட்டி மன்னம் ரமணி (65) என்பவரது நகைக்காக ஆசைப்பட்டு, அவரை வீட்டிற்கு வரவழைத்து, போர்வையைத் தலையில் போட்டு மூடி, கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், மேலும் அவர் அணிந்திருந்த தாலி சரடு, செயின், கம்மல் என 50 கிராம் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு சடலத்தை சூட்கேஸில் அடைத்துக் கொண்டு வந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தந்தை, மகள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சூட்கேஸில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details