திருவாரூர்:திருத்துறைப்பூண்டி தாலுகா கொக்கலாடி பகுதியில் உள்ள சித்தேரி ஏரி சுமார் 11 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் செடி, கொடி என வளர்ந்து சுமார் 50 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த ஏரியின் பாசனத்தை நம்பி சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. குறிப்பாக, கொக்கலாடி, பாமணி, மாறாச்சேரி, அருந்தவபுரம், கொற்கை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
சித்தேரி ஏரியை தூர்வார விவசாயிகள் கோரிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu) அதேபோல், இந்த ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கொக்கலாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதனிடையே, தற்போது விநியோகிக்கப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீரும் இப்பகுதி மக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை.
ஆகையால், தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் இந்த சித்தேரி ஏரியை தூர்வார வேண்டும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும், அதேபோல குடிநீர் தட்டுப்பாடும் குறையும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஜானகிராமன் கூறுகையில், “சித்தேரி ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் கத்திரி, கீரை உள்ளிட்டவை சாகுபடி செய்வது தடைபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 50 குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சித்தேரி ஏரியை தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்த ஏரியை தூர்வாரினால் குடிநீர் தட்டுப்பாடும் தீர்ந்துவிடும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:"திருவாரூரில் இருளர் இனம் கிடையாதாம்"...25 வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு போராடும் பழங்குடியின மக்கள்! - Irular Community Certificate