திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று எள், உளுந்து, பயிறு உள்ளிட்ட கோடை சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி சேதுராமன் (CREDIT - ETVBharat TamilNadu) இந்த நிலையில், 80 முதல் 100 நாட்களான பருத்தி பயிர்கள் நன்றாக காய் வைத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக பருத்தி சாகுபடி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், அடியக்கமங்கலம், சேமங்கலம், கோட்டூர் இருள்நீக்கி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிர்கள் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தமிழகத்தில் இயங்கி வந்த பருத்தி கழக அலுவலகம் தற்போது கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பருத்தி விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக தமிழகத்தில் மீண்டும் பருத்தி கழக அலுவலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நன்னிலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேதுராமன் பேசுகையில், “கடந்த ஆண்டு பருத்தியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பணம் போட்டு பருத்தி பயிர் செய்தது தற்போது ஆயிரக்கணக்கிலேயே திரும்ப வந்துள்ளது. தமிழக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.
45 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் எந்த லாபமும் இல்லை. விவசாயிகள் கடுமையான கடனுக்கும், பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை” என்றார்.
இதையும் படிங்க: மழை எதிரொலி; சின்ன வெங்காயத்தின் விலை குறைவு.. மூட்டை மூட்டையாக வாங்கிச் சென்ற விவசாயிகள்! - Onion Price Decrease