தேனி:தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான, கேரள மாநிலம் குமுளி அடுத்த ஆனவச்சால் பகுதியில் இந்திய சர்வே ஆணையத்தைச் சார்ந்த அதிகாரிகள் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பணிகளில், தமிழக அரசுக்குச் சொந்தமான பகுதிகளைக் கேரளா அரசு சார்பில் அளவீடு செய்து வருவதாகவும், உரிய மூல ஆவணப்படங்கள் இன்றி ஒருமனதாக அதிகாரிகள் அளவீடு செய்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், நில அளவீட்டுப் பணிகளைச் செய்து வரும் அதிகாரிகளை நேரில் சந்தித்து, விளக்கம் கேட்கச் செல்வதாகக் கூறி தமிழக கேரள எல்லையில் உள்ள லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே ஒன்று திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ஆய்வுப் பணி மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கேரள மாநிலத்திற்குச் சென்று சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் உரிய மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கூறி விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஆய்வுப்பணி மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, விவசாயச் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.