தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருத்திக்கு ரூ.10,000 கொள்முதல் விலை; கும்பகோணம் விவசாயிகள் கோரிக்கை! - KUMBAKONAM COTTON FARMERS DEMAND

Cotton Farmers Demand: கும்பகோணத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், பருத்தி சாகுபடி செலவிற்கேற்ப விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள், பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தராசுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 1:49 PM IST

பருத்தி விவசாயிகள் பேட்டி
பருத்தி விவசாயிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்:கும்பகோணம் கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இவ்வாண்டிற்கான பருத்தி மறைமுக ஏலம் கடந்த மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது. இந்த ஏலம் வாரந்தோறும் புதன் கிழமை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 4வது வாரமாக நேற்று நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, 205 டன் 400 கிலோ பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பருத்தி விவசாயிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனை ஆந்திரா, தெலங்கானா, தேனி, விருதுநகர், கும்பகோணம், கொங்கனாபுரம், செம்பொன்னார்கோயில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு பருத்திகளை நேரில் பார்வையிட்டும், சோதனையிட்டும் விலை நிர்ணயம் செய்தனர். இதன்படி, அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்ட விலை இறுதி செய்யப்பட்டு அவை பட்டியலிடப்பட்டு லாட் வாரியாக விலை வெளியிடப்பட்டது.

இதன்படி நேற்று அதிகபட்சமாக குவிண்டால் ரூபாய் 7 ஆயிரத்து 519 ஆகவும், குறைந்தபட்சமாக ரூபாய் 6 ஆயிரத்து 469 ஆகவும், சராசரியாக விலை ரூபாய் 6 ஆயிரத்து 889 ஆகவும் இருந்தது. ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட 205 டன் 400 கிலோ பருத்தி ரூபாய் ஒரு கோடியே 40 லட்சத்திற்கு ஏலம் போனது என்பது குறிப்பிடதக்கது. கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடப்பாண்டில் இன்று வரை தொடர்ந்து 4 வாரங்களாக நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், இதுவரை 600 டன் 200 கிலோ பருத்தி ரூபாய் 4 கோடியே 1 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தி ஏலம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பருத்தி விவசாயி ஆதனூர் செந்தில்குமார், “ஒரு ஏக்கர் பருத்தி பயிடுவதற்கு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு குவிண்டால் பஞ்சு எடுப்பதற்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகிறது. பருத்தி எடுப்பதற்கு ஒரு நாளுக்கு ஒரு ஆளுக்கு 200 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

முதல் 250 பருத்தியில் இருந்து பஞ்சு எடுப்பதற்கு கிலோவிற்கு 5 முதல் 6 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஆதலால் ஒரு குவிண்டால் பஞ்சு விலை 9 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை எடுத்தால் தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். மழை பாதிப்பின் காரணமாக ஒரு ஏக்கருக்கு 12 குவிண்டால் வரை எடுக்கக்கூடிய பஞ்சு இப்போது 8 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது” என்று கூறினார்.

பருத்தி விவசாயி சேங்கனூர் அஜித்குமார் கூறுகையில், “வீடுகளில் இருந்து பஞ்சு மூட்டையை எடை போட்டபோது 83 கிலோ இருந்தது. ஆனால் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வந்து எடை போட்டபோது, 73 கிலோ தான் இருந்தது. இதுகுறித்து கேட்டதும் 75 கிலோ என்று எழுதினர். ஒரு தாட்டிற்கு 8 கிலோ முதல் 10 கிலோ குறைகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மின்னணு தராசுகளை வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:"திருவாரூரில் இருளர் இனம் கிடையாதாம்"...25 வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு போராடும் பழங்குடியின மக்கள்! - Irular Community Certificate

ABOUT THE AUTHOR

...view details