ஹைதராபாத்: 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பெயரும் இடம்பெற்றிந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இடைகால பிணை (Interim bail) கிடைத்த நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. டிசம்பர் 5 இந்த படம் உலகளவில் திரையிடப்பட்டது.
சிறப்பு காட்சியில் சோகம்
ஆனால், 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சியானது சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4 அன்று திரையிடப்பட்டது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்துகொண்டார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சைப்பெற்று வந்த ரேவதி (35) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரசிகை இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், இழப்பீடாக ரூ.25 லட்சம் ரேவதி குடும்பத்திற்கு வழங்கினார். இந்த சூழலில், டிசம்பர் 11 அன்று, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா திரையரங்கு மீது புகார் அளித்தனர்.
அல்லு அர்ஜுன் கைது
இதனைத்தொடர்ந்து நேற்று (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை அல்லு அர்ஜூன் வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
இந்த விசாரணையை அடுத்து சிக்கடபள்ளி காவல்துறையினர் அல்லு அர்ஜூன், சந்தியா தியேட்டர் திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜு, ஊழியர் விகய் சந்தர் ஆகியோர் மீது BNS 105 மற்றும் 118 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இடைக்கால பிணை
இவ்வழக்கை விசாரித்த நம்பள்ளி நீதிமன்றத்தில், காவல்துறை தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது. அதில், "புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்கு தரப்பில் இருந்தோ, அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்தோ இவ்வளவு கூட்டம் கூடும் என்பதற்கான எந்த அனுமதியும் வாங்கவில்லை," என்று தெரிவித்திருந்தது.
வாதத்தை கேட்ட பின் அல்லு அர்ஜுனை 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது. பின்னர், நேற்று (டிசம்பர் 13) மாலை அவருக்கு இடைகால பிணை வழங்கப்பட்டது. அதில், "விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தியா திரையரங்கம் சிறப்புக் காட்சிக்கான அனுமதியைப் பெற காவல்துறையிடம் சமர்ப்பித்த கடிதத்தின் கோப்புகள் அடிப்படையில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று அதிகாலை விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 14) சனிக்கிழமை காலை சஞ்சல் குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.