சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பரவலாக அதிக மழை பெய்துள்ளது. முக்கியமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இதன் காரணமாக 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 14) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் (Special classes) நடத்தப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
- தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கூறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகள் அல்லது கல்லூரிகள் எந்த விதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பு என்ன?
மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிசம்பர் 13) லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலைக் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது படிப்படியாக மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.
இதையும் படிங்க |
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் மத்திய மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வட தமிழகத்தில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை உள்ளது. டெல்டா மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். நெல்லை மாவட்டத்தில் அதி கனமழையும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.