கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த அரசூரில் உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறை மாணவர்கள் 6 மாத ஆராய்ச்சிக்கு பிறகு குப்பைகளை அகற்றும் சிறிய ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். இந்த ரோபோக்களை பொது இடங்கள் மற்றும் வீடுகளில் சேரும் காகித குப்பைகளை அகற்றும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
அறிவியல் சோதனை செய்து சாதனை படைத்த மாணவர்கள்: இந்நிலையில், மாணவர்கள் உருவாக்கி உள்ள 70 ரோபோக்களை ஒரே நேரத்தில் 750 சதுர அடியில் உள்ள காகித குப்பைகளை அகற்றும் சாதனையில் ஈடுபட்டு, இந்தியா மற்றும் ஆசியா புக்ஸ் ஆப் ரெக்காட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்தது. இந்தியா மற்றும் ஆசியா புக்ஸ் ஆப் ரெக்காட்ஸின் நடுவர் கவிதா, ஜெய்ன் கலந்துகொண்டு இச்சாதனை நிகழ்வைப் பதிவு செய்து அதற்கான சான்றிதழைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.
“ரோபோக்களும் பரிணாம வளர்ச்சியடைந்துவிட்டன”: முன்னதாக, நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிஆர்டிஓ வளர்ச்சி மேம்பாட்டுப் பிரிவின் மின்னணுவியல் மற்றும் ரேடார் பிரிவின் ‘ஜி’ பிரிவு திட்ட இயக்குநர் விஞ்ஞானி நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இன்று ரோபோக்கள், மனித ரோபோக்களாய்ப் பரிணமித்துவிட்டன. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் ரோபோக்கள் வளர்ச்சி பெற்றுவிட்டன. அதன் பயன்பாடும் பெருகிவிட்டன. தொடக்கத்தில் ஒரு ரோபோவை வடிவமைக்கும் பொழுது அதன் வடிவம், வேகம், கியர் போன்றவற்றில் சிக்கல்கள் எழும். மாணவர்களாகிய நீங்கள் இந்தப் பயிற்சியில் திறன் பெற்றுவிட்டால் எதிர்காலத்தில் சாதிக்க முடியும்.
இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை: 18 மாதத்தில் 5,020 அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை! - MINISTER MA SUBRAMANIAN
ரேடாரர்களை நாமே ஏற்றுமதி செய்கிறோம்: முன்னர் ரேடாரர்களை பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி வந்தோம். தற்போது இந்திய விஞ்ஞானிகளே இந்த ரேடார்களை உருவாக்கி பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர இந்தியாவில் தயாரிக்கப்படும் ரேடர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ள நிலையில் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்கவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்” என்றார்.
ஆறு மாத கால உழைப்பின் பயன்: இந்த ரோபோ செயல்பாடுகள் குறித்து கிலமன் ரிசாரியோ என்ற மாணவர்கள் கூறுகையில், “ஆறு மாதம் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுக்கு இடையே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் வீட்டில் தனியாக உள்ளவர்கள், செல்போன் மூலம் எளிதாக இந்த ரோபோவை பயன்படுத்தி வீடுகளை சுத்தம் செய்து கொள்ளலாம்” என்றார்.
“ஐஐடி சாதனையை முறியடித்துவிட்டோம்”: இதுகுறித்து மாணவி மதிமலர் கூறுகையில், “ நாங்கள் ஒன்றிணைந்து இந்த சாதனையை செய்துள்ளோம். இதற்கு முன்னர், சென்னை ஐஐடி மாணவர்கள் 40 ரோபோக்களை வடிவமைத்து இச்சாதனையை பெற்ற நிலையில் அதனை முறியடித்து, தற்போது எழுவது ரோபோக்களை கொண்டு சுத்தம் செய்து, இந்த சாதனையை படைத்துள்ளோம். மேலும், பல்வேறு ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கே.பி.ஆர் கல்விக்குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கீதா, உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.