டவர் மீது ஏறிய விவசாயிகள் வீடியோ (credits- ETV Bharat Tamil Nadu) திருச்சி:காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி இன்று (மே 22) திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பிரதமர் மோடி கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை தற்போது நிறைவேற்ற வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், மே 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாகவோ அல்லது பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாகவோ அல்லது சாஸ்திரி பவன் முன்பாகவோ அல்லது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகமான தலைமைச் செயலகம் முன்பாகவோ காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை செல்ல இருந்த நிலையில், காவல்துறையினரால் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்கள்.. செய்வதறியாமல் தவிக்கும் சேலம் விவசாயிகள்! - Heavy Rainfall In Salem
இதைத் தொடர்ந்து, இன்று காலை அய்யாகண்ணு உட்பட 7 விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, திருச்சி உறையூர் காவேரி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து, திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தனபால், தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அய்யாகண்ணு உள்ளிட்ட மற்ற விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் காவல்துறையினர், விவசாயிகளை உடனடியாக கைது செய்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.
மேலும், செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கீழே இறக்குவதற்காக, திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விவசாயிகளை கீழே இறக்க முற்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின் விவகாயிகள் கீழே இறங்கினர்.
இதையும் படிங்க: மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவான தீர்மான நகலை எரித்து தஞ்சையில் விவசாயிகள் ஆர்பாட்டம்! - Thanjavur Farmers Protest