திருவாரூர்: முன்னதாக, “மேகதாது அணை கட்டுமானத்துக்கு ஆணையம் எடுத்த முடிவை நிராகரிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக அரசு மறுத்துவிட்டது. எனவே, மேகதாது அணை கட்டுமானத்தை ஆதரிக்கும் வகையில், மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மேலும், காவிரி பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் இன்று (மாா்ச் 15) திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நலச் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மேகதாது அணை கட்டுமானப் பணிக்கு மறைமுகமாக துணை போவதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நலச் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, “ஜனவரி 1ஆம் தேதி காவேரி மேலாண்மை ஆணையத்தின் கடைசி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆணைய கூட்டத்தில் முறையிட்டது.
அதற்கு தமிழ்நாடு அரசின் பிரதிநிதி சந்திப் சக்சேனா அனுமதி மறுத்து கருத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், மத்திய அரசின் பிரதிநிதிகள் கர்நாடகா மேகதாது அணை கட்டுவதில் வரைவு திட்ட அறிக்கை திரும்ப அனுப்ப கோரியது. மேகதாது அணை கட்டுமானத்துக்கு ஆணையம் எடுத்த முடிவை நிராகரிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில், மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கருத்து கேட்டு, மத்திய அரசு அனுப்பி உள்ள தீர்மானத்தை, சட்ட விரோதமானது என அறிவித்து, தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசிற்கும் அனுப்பி அவசர சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், போராட்டத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டு ஆணையம் அமைத்து, கிராமப்புற சாலைகளுக்கெல்லாம் சுங்க வரி வசூலிக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 'கை' நழுவும் இரு தொகுதிகள்.. உத்தேச பட்டியல் வெளியீடு!