திருப்பூர்:விவசாயத்தையும், பின்னலாடை உள்ளிட்ட தொழில் வளத்தையும் சரிவிகிதத்தில் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது திருப்பூர். குறிப்பாக திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் ஆடைகள் தான், அந்த அளவிற்கு திருப்பூர் ஆடைகள் உலக அளவில் பிரபலமானவை. ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வரை அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் டாலர் நகரமாகவும் திருப்பூர் திகழ்ந்து வருகிறது.
பின்னலாடைத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதால், தமிழ்நாடு மட்டுமின்றி பல வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அடைக்கலமாக விளங்கி வருகிறது திருப்பூர். அதாவது பனியன் துறையை நம்பி கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு பாத்திரங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பெருந்துறை தொகுதிகளில் விவசாயம் அதிக அளவில் நடைபெறும் பகுதியாகவும் விளங்கி வருகிறது.
தொகுதி நிலவரம்: வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் மாவட்டத்தில், 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதாவது திருப்பூர், வடக்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாக இருக்கிறது. இது தவிர திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியானது கோவை நாடாளுமன்ற தொகுதியிலும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியிலும்; தாராபுரம், காங்கயம் சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியிலும், அவிநாசி சட்டமன்ற தொகுதியானது நீலகிரி தொகுதியிலும் உள்ளது. இப்படி திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்பது பலமுறை நடைபெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் 39வது மக்களவைத் தொகுதிகளில் 18வது தொகுதியாக திகழும் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆவார்கள். மொத்த வாக்காளர்களில் பெண் வாக்காளர்களே அதிகம்.
தமிழ்நாட்டின் 7வது மிகப்பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தொழில் நகரமாகும். கோவையுடன் இணைந்திருந்த திருப்பூர் 2008ஆம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு பணிகளின் பொழுது திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவானது.
அதற்கு முன்பாக, கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் என்ற 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என்ற 2 சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் என்ற 4 சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
திருப்பூர் மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்டு, இதுவரை 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக அதிமுக 2 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த செ.சிவசாமி 2 லட்சத்து 95 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்வேந்தனை (2,10,385) 83 ஆயிரத்து 346 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதையடுத்து, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கிய சத்தியபாமா 4 லட்சத்து 42 ஆயிரத்து 778 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் களமிறங்கினர்.
அதில் திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் போட்டியிட்டு, 5 லட்சத்து 825 வாக்குகள் பெற்றார், அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்றார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்த எம்பி: திருப்பூர் அணைக்காடு பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளியும், கம்யூனிச ஆதரவாளருமான குப்புசாமியின் மகன் கே.சுப்பராயன். 10ம் வகுப்பு வரை படித்திருக்கும் சுப்பராயன், 1969ஆம் ஆண்டு தனது 22வது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டவர். திருப்பூர் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், பனியன் தொழிலாளர் சங்கச் செயலாளர் என தனது பணியைத் தொடங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர், மாநிலத் துணைச் செயலாளர், அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளில் வகித்திருக்கிறார்.
கட்சிக்காக பலமுறை சிறை சென்றவர்: தற்போது 76 வயதாகும் கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டு குழுத் தலைவராகவும் அகில இந்திய ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் துணைத் தலைவராகவும், பனியன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 1970ல் தொடங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார். 1985, 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து 2004 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றிபெற்ற சுப்பராயன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் தோல்வியைத் தழுவினார். அதையடுத்து, 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திருப்பூரில் களமிறங்கி வெற்றியைக் கண்ட நிலையில் தற்போதைய தேர்தலிலும் அவரையே களமிறக்கியுள்ளது கட்சி மேலிடம்.
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான கே.சுப்பராயன், தொகுதிக்காக செய்தது என்ன?
நிதியில் மீதமே ரூ.300 தான்: இதுதொடர்பாக திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கூறுகையில், "இந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்கள் வழங்கிய மனு அனைத்துக்கும் நிதி ஒதுக்கி பணி செய்யவில்லை என்ற அதிருப்தி உள்ளது. அதற்குரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு வழங்கும் நிதி என்பதை, ஒரு வருடம் ரத்து செய்துவிட்டார்கள், ஒரு வரும் பாதிதான் கொடுத்தார்கள். இத்துடன் மற்ற 3 வருடத்தில் கொடுத்த அனைத்தையும், மக்களின் குடிநீர் தேவை, மருத்துவ தேவை, 3 சக்கர வாகன வழங்க செலவழித்துள்ளேன். குறிப்பாக 8ம் வகுப்பு படிக்கக்கூடிய செவித்திறனற்ற மாணவிக்கு 6 லட்சம் செலவில் நவீன கருவியை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைந்தேன். நான் செய்த உதவிகளிலேயே, பெரிதும் மகிழ்ந்த உதவி இதுதான் என்றார்.
மேலும், அந்தியூரில் மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது, பர்கூர் மலைப்பகுதியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி திருமண நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் தவித்த மக்களுக்காக சமுதாய கூடங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன் மற்றும் திருப்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலைகள், வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள் என ஒரு பைசா கூட மிச்சம் இல்லாமல் பல திட்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறேன். தற்போது என்னுடைய கணக்கில் வெறும் ரூ.359 மட்டுமே மீதம் உள்ளது. மற்ற எல்லாமே மக்கள் நலப்பணிக்காக விநியோகிக்கப்பட்டு விட்டது" எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை: விவசாயி சதீஷ்குமார் கூறுகையில், "திருப்பூர் எம்பி இங்கு நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து போதுமான கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேசியதற்கான தகவலும் இல்லை. இதுவரை விவசாய சங்கத்தினரை நேரில் வந்து பார்க்கவில்லை. விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கின்றோம் வந்து கலந்து கொள்ளலாம்.
கனிமம் தொடர்பாக விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது கூட பிரச்சனைகள் வெளிப்படையாக தெரிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் திருப்பூர் எம்பி என்ற அடிப்படையில் போதுமான கவனம் செலுத்தவில்லை, களத்தில் இல்லை என்பது போலதான் தோன்றுகிறது. இன்னும் களத்திற்கு வரவேண்டும், மக்கள் பிரச்சனையை கேட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான முழு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.