திருப்புறம்பியம் விவசாயி நிலம் திமுக பிரமுகரால் அபகரிப்பா? தஞ்சாவூர்:கும்பகோணம், திருப்புறம்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (56). இவர், அவரது பூர்வீக நஞ்சை நிலம் இரண்டரை ஏக்கரில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு, அவருக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில், சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை, திமுக பிரமுகரான கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் கணேசன் என்பவருக்கு போலி பத்திரம் தயாரித்து, சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக விவசாயி பன்னீர்செல்வம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “கடந்த 2022ஆம் ஆண்டு இது தன்னுடைய நிலம், இதில் விவசாயம் செய்யக்கூடாது என்று கணேசன், தன்னை மிரட்டியதோடு, விவசாய நிலத்தில் இருந்த நீர்முழ்கி மின் மோட்டாரை அத்துமீறி அடியாட்களுடன் சென்று எடுத்துச் சென்றார்.
இது தொடர்பாக, நான் கும்பகோணம் கோட்டாட்சியர் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். புகாரின் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில், அது போலி பத்திரம் என்பது தெரிய வந்தது. எனவே, பன்னீர்செல்வத்தை தொந்தரவு செய்யக்கூடாது என்று கணேசனிடம் அறிவுறுத்தி, மின்மோட்டாரை மீட்டு ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, நான் நிலத்தை பணம் கொடுத்து வாங்கியுள்ளேன். எனவே, தனக்குச் சொந்தமான நிலத்தை பிரித்துக் கொடுக்கும்படி, தொடர்ந்து கணேசன் மிரட்டி வந்தார். இதனையடுத்து, கடந்த செப்டம்பரில், நான் எனது நிலத்தில் சம்பா சாகுபடி செய்தேன்.
தற்போது, பயிர்கள் வளர்ந்து 10 அல்லது 15 நாட்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நேரத்தில், கணேசன் அடியாட்கள் மற்றும் அறுவடை இயந்திரம் உதவியுடன் சென்று, நெற்பயிர்களை அறுவடை செய்து சேதப்படுத்தியுள்ளார். இதனை எதிர்த்த தனது குடும்பத்தினரை, கணேசனின் அடியாட்கள் அரிவாள் காட்டி மிரட்டியுள்ளனர்.
இது குறித்து சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தேன். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுவாமிமலை போலீசார், நிலத்தில் சட்டவிரோதமாக அறுவடை செய்தவர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். இதனால், சுமார் ஒன்றரை ஏக்கர் பயிர்களை கணேசன் அறுவடை செய்து திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் புகார் அளித்தேன். புகாரின் பேரில், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சுவாமிமலை காவல் நிலையம் மற்றும் தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன்.
நில மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கட்சி பலம், அதிகார பலம், பணபலம் மற்றும் அடியாட்கள் பலம் காரணமாக, சட்டவிரோதமாக நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் கணேசன் மீது தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்த மைம் கோபி!