கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள 'டிலைட் திரையரங்கம்', 1914ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டது. இந்தியாவில் சினிமா பிரபலமடைந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் இதுவாகும். முதலில் வெரைட்டி ஹாலாக பெயரிடப்பட்டிருந்து, பின்னர் டிலைட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதில் இந்தியாவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் என்பதால், புகழ்பெற்ற இயக்குநர்களின் அனைத்து திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. மேலும் நடிகர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்டவர்களில் தொடங்கி, தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன.
1914ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திரையரங்கம், மூன்று தலைமுறையினர் கடந்து, கோவையின் முக்கியமான அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக திரையரங்குகள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த தரை டிக்கெட் முதல், பின்னர் வந்த பால்கனிகள் வரை, இங்கு குறைந்த விலைக்கே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், திரையரங்கம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அந்தந்த காலத்திற்கேற்ப திரையரங்கில் பெரும்பான்மையான வசதிகள் செய்யப்படவில்லை. இருப்பினும், பழைய படங்கள் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன.
கருப்பு வெள்ளை திரைப்படங்களில் துவங்கி, வண்ணப்படங்கள் என அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டு வந்த நிலையில், நவீனத் தொழில்நுட்பங்களுடன் புதிய திரையரங்குகள் வரத் தொடங்கியதால், டிலைட் திரையரங்கிற்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர். இதனால் போதிய வருவாய் இல்லாமல், இதனை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் வணிக கட்டிடம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.