சென்னை:கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி என்ற பெயரில் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான ரொக்க விருதை 2005ஆம் ஆண்டு முதல் மியூசிக் அகாடமி, பிரபல ஆங்கில நாளிதழான தி இந்துவுடன் இணைந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் டிசம்பரில் 98-வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: தீட்சிதர் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? ஐகோர்ட் கேள்வி!
இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம் தான் விருதை வழங்குவதாகவும், இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தி இந்து குழுமம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2005ஆம்
ஆண்டு விருதை இந்து குழுமம் உருவாக்கிய போதும், விருதுக்குரியவர்களை மியூசிக் அகாடமி தான் தேர்ந்தெடுக்கிறது எனவும், அதில் தி இந்து குழுமத்துக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் யார் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்குவதால் எம்.எஸ்.சுப்புலட்சுமியை எந்த வகையிலும் சிறுமைப்படுத்தவில்லை எனவும், கடந்த 20 ஆண்டுகளாக விருதுகள் வழங்கி வரும் நிலையில், நடப்பாண்டு விருது வழங்க தடை விதிக்கக் கூடாது எனவும், எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்