அரியலூர்:அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வடகடல் கிராமம் கீழத்தெரு காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜமாணிக்கம் (60). இவருடைய மகன்கள் ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் மதியழகன், இளையபெருமாள், மகேந்திரன், மணிகண்டன் என ஆறு பேரும் ராஜமாணிக்கம் வீட்டின் அருகே குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் உறவினரான அண்ணாமலை என்பவரின் மகன்கள் அழகானந்தம், ரெங்கராஜ் உள்ளிட்டவர்களுக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலப் பிரச்னை நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜமாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தினருக்கு மின் இணைப்பும், குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கக்கூடாது என பிரச்னை செய்து, இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை போராடியும் எந்த பயனும் கிடைக்காததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜமாணிக்கத்தின் மகன் ராஜீவ்காந்தி (45) ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.