தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“அமைச்சர்களுடன் பேசியும் நடந்ததோ வேறு” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

Ex Minister Sengottaiyan: அப்பாவி மலைவாழ் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் சட்டசபையில் குரல் எழுப்புவோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 12:00 PM IST

ex minister Sengottaiyan said that false case against the hill dwellers should be withdrawn
மலைவாழ் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

மலைவாழ் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஈரோடு: சண்முகம் என்பவர் சத்தியமங்கலம் மலைப்பகுதி மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அரசு அறங்காவலராக நியமிக்கப்பட்டார். இதற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பூசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சண்முகம் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த பிரச்னையில், அதிமுக ஊராட்சித் தலைவர் சரவணன் மற்றும் கோயில் பூசாரிகள் 20 பேர் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, இதனை திமுக செய்யத் தூண்டியதாகக் கூறி திமுக அரசை கண்டித்தும், கோயில் வழிபாட்டு முறைகளில் திமுக தலையிடக் கூடாது என வலியுறுத்தியும், சத்தியமங்கலம் மலை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500 பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், இதற்கு உள்ளூர் போலீசார் அனுமதி வழங்காததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி ஆகியோர் தலைமையில் சின்ன சாலட்டி என்ற கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாக்கம்பாளையம், கோம்பையூர், கோம்பைத்தொட்டி, கூத்தம்பாளையம், அருகியம், குரும்பூர் உள்ளிட்ட 82 குக்கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அப்பாவி மலைவாழ் மக்கள் மீது திமுக அரசு பொய்யான புகார் அளித்துள்ளது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பொய்யான புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார் மீது சட்டசபையில் புகாராக குரல் கொடுப்போம். வரும் 12ஆம் தேதிக்குள் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதம் நடைபெறும். மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். அப்போது இந்த அதிகாரிகளை பார்த்துக் கொள்வோம்.

போலீஸ் அதிகாரிகள் தர்மத்துடன் செயல்பட வேண்டும், பாவத்தைச் சேர்க்கக்கூடாது. மலைவாழ் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். திமுகவின் தூண்டுதல் பேரில்தான் இந்த பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது சட்ட விரோத செயல்.

பொய்யான வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசினேன். இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்கள். ஆனால் நடந்ததோ வேறு" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"உரிமையை பாதுகாப்பதற்காக கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டோம்" - எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details